தமிழ்ப் புத்தாண்டு – சில புரிதல்கள்

ஏப்ரல் 14ம் திகதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்கள் கொண்டாடினார்கள். அன்றைய தினம் இந்து ஆலயங்களில் கடவுள்களைச் சமஸ்கிருத மொழியில் வழிபட்டு மகிழ்ந்தார்கள். புது வருடம் ‘பிறந்துள்ளது’ என்று, மனமகிழந்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டாடினார்கள்.
சித்திரை மாதத்தில் ‘பிறப்பதாகச்’ சொல்லப்படும் இந்த ஆண்டுப் பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா? பல்லாயிரம் ஆண்டுப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டுள்ள தமிழினத்தின் புத்தாண்டு சித்திரை மாதத்தில் தான் வருகின்றதா? இந்த ஆண்டுப் பிறப்பு உண்மையில் தமிழர்களின் ஆண்டுப் பிறப்புத்தானா?
இவ்வேளையில் வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் நமது நோக்கமாகும்.

அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம். இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையை கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம். அறுபது ஆண்டுகள் பற்சக்கர முறையில் திரும்பித் திரும்பி வருவதை நாம் காண்கின்றோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூட தமிழ்ப் பெயர் இல்லை. இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கி.பி-78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப் பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்கவழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.
மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. “ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன் பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களை காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ நாரதர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி அறுபது குமாரர்களை பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.” (அனைவரும் ஆண்களே, பெண்கள் எவரும் இல்லை). தமிழனும் தன்னை மறந்ததால் ஆண்டு ‘வருடமாகி’ விட்டது. வடமொழியில் ‘வர்ஷா’ என்றால் பருவகாலம், மழைக்காலம் என்று அர்த்தம். உலகெலாம் வாழுகின்ற இனத்தவர்கள் தத்தமக்குரிய ஆண்டுப் பிறப்பில் தான் நற்பணிகளை தொடக்குகிறார்கள்.
பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு முறை’ குறித்துப் புரிந்து கொள்ளுதல் இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கக் கூடும். தமிழன் இயற்கையை வணங்கி வந்தவன். மழை, வெயில், குளிர், பனி, தென்றல, வாடை இவை மாறி மாறிப் பருவ காலங்களில் மனிதனை ஆண்டு வந்ததால் இக்காலச் சேர்வையை தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான். மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள், வானியலில் அரும்பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையை கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும் தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் அவர்களைத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார். தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாக பார்ப்போம்.
தமிழர்கள் ஒரு ஆண்டை மட்டும் பகுத்ததோடு நின்று விடவில்லை. ஒரு நாளையும் ஆறு சிறுபொழுதாகப் பகுத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். ஒரு நாளைக்கு அறுபது நாழிகைகள் என்று கணக்கிட்டுள்ளனர். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் கொண்டதாகும். ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக வகுத்தார்கள். தமிழர்களோ தமது ஆண்டை அந்த ஆண்டுக்குரிய வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்தார்கள்.
1. இளவேனில் – (தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் – (பங்குனி-சித்திரை)
3. கார் – (வைகாசி-ஆனி)
4. கூதிர் – (ஆடி-ஆவணி)
5. முன்பனி – (புரட்டாதி-ஐப்பசி)
6. பின்பனி – (கார்த்திகை-மார்கழி)
காலத்தை நாழிகையாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் வகுத்த பழம் தமிழன். தனது வாழ்வை இளவேனிற் காலத்தில் தொடங்குகின்றான். அதனால் இளவேனிற் காலத்தையே தனது புதிய ஆண்டின் தொடக்கமாகவும் கொண்டான். தமிழர்கள் மட்டுமல்ல சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என பலகோடி இன மக்கள் இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருகின்றார்கள். இடையில் தமிழன் மட்டும் மாறிவிட்டான். தன்பெருமை மறந்தான். மற்றைய இனத்தவர்கள் மாறவில்லை. அதனால் தமக்கேயுரிய பண்பாட்டுடன் பெருமையாக வாழ்கின்றார்கள்.
அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு – உண்மையான – சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்எது?
தமிழனுக்கு ‘வருடம்’ ‘பிறப்பதில்லை.’..
‘புத்தாண்டு ஆரம்பமாகின்றது.’
அந்தத் தினம் தான் எது?
*“தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.”*
பொங்கல் திருநாள் தமிழரின் தனிப்பெருந் திருநாள் ஆகும். பொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்’ என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது-போகியது-போகி) பொங்கல் என்பது பொங்குதல் – ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.
தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் கால கட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனை போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ – என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.
தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.
தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களை தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.
தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்கு படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களை தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.
பருப்புத் தவிடு பொங்க – பொங்க
அரிசித் தவிடு பொங்க – பொங்க
– என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் பாடுகிறார்கள்.

தமிழ் ஆண்டுகள்
பல பழைமையான தமிழ் நூல்களும், கல்வெட்டுகளும் இந்த தமிழ் ஆண்டுகளையே குறிப்பிடுகின்றன. அபிதான சிந்தாமணி, ஆ.சிங்காரவேலு முதலியாரால் (1855-1931) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். அபிதான சிந்தாமணியில் (1932) தமிழ் ஆண்டுகள் என்று கூறப்பட்ட ஆண்டுகள் பெயர்கள் பின் வருமாறு. தமிழ் ஆண்டுகள் அறுபதாக பிரிக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் இப்பெயர்கள் ஆண்டுகளுக்கு இடப்படுகின்றன. இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது.
எண். பெயர் பெயர் (தமிழில்)
01. பிரபவ நற்றோன்றல்
02. விபவ உயர்தோன்றல்
03. சுக்ல வெள்ளொளி
04. பிரமோதூத பேருவகை
05. பிரசோற்பத்தி மக்கட்செல்வம்
06. ஆங்கீரச அயல்முனி
07. ஸ்ரீமுக திருமுகம்
08. பவ தோற்றம்
09. யுவ இளமை
10. தாது மாழை
11. ஈஸ்வர ஈச்சுரம்
12. வெகுதானிய கூலவளம்
13. பிரமாதி முன்மை
14. விக்கிரம நேர்நிரல்
15. விஷு விளைபயன்
16. சித்திரபானு ஓவியக்கதிர்
17. சுபானு நற்கதிர்
18. தாரண தாங்கெழில்
19. பார்த்திப நிலவரையன்
20. விய விரிமாண்பு
21. சர்வசித்து முற்றறிவு /
முழுவெற்றி
22. சர்வதாரி முழுநிறைவு
23. விரோதி தீர்பகை
24. விக்ருதி வளமாற்றம்
25. கர செய்நேர்த்தி
26. நந்தன நற்குழவி
27. விஜய உயர்வாகை
28. ஜய வாகை
29. மன்மத காதன்மை
30. துன்முகி வெம்முகம்
31. ஹேவிளம்பி பொற்றடை
32. விளம்பி அட்டி
33. விகாரி எழில்மாறல்
34. சார்வரி வீறியெழல்
35. பிலவ கீழறை
36. சுபகிருது நற்செய்கை
37. சோபகிருது மங்கலம்
38. குரோதி பகைக்கேடு
39. விசுவாசுவ உலகநிறைவு
40. பரபாவ அருட்டோற்றம்
41. பிலவங்க நச்சுப்புழை
42. கீலக பிணைவிரகு
43. சௌமிய அழகு
44. சாதாரண பொதுநிலை
45. விரோதகிருது இகல்வீறு
46. பரிதாபி கழிவிரக்கம்
47. பிரமாதீச நற்றலைமை
48. ஆனந்த பெருமகிழ்ச்சி
49. ராட்சச பெருமறம்
50. நள தாமரை
51. பிங்கள பொன்மை
52. காளயுக்தி கருமைவீச்சு
53. சித்தார்த்தி முன்னியமுடிதல்
54. ரௌத்திரி அழலி
55. துன்மதி கொடுமதி
56. துந்துபி பேரிகை
57. ருத்ரோத்காரி ஒடுங்கி
58. ரக்தாட்சி செம்மை
59. குரோதன எதிரேற்றம்
60. அட்சய வளங்கலன்
தமிழ் மாதங்கள்
பண்டைய தமிழகத்தில் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஒன்று பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும், மற்றொன்று பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் கணக்கிடப்பட்டது. சூரிய மாதங்கள் பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். ஒரு சூரிய மாதத்தில் சந்திரன் பூரணை அடையும் நாள் எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்நட்சத்திரத்தின் பெயரே சந்திர மாதப் பெயராகக் கொள்ளப்பட்டது. உதாரணமாக, சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது சந்திரன் பூரணை அடையும் நாளில் சித்திரை நட்சத்திரம் வரும் என்பதால் சூரிய மாதமான மேஷ மாதத்திற்கு உரிய சந்திர மாதம் சித்திரையாகும். தற்காலத்தில் தமிழகத்தில் சந்திர மாதப்பெயர்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் சூரிய மாதப் பெயர்களே பயன்படுத்தப்படுகிறது. சூரிய மாதங்களின் பெயர்களும், அந்தந்த சூரிய மாதங்களுக்குரிய சந்திர மாதங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன. சூரிய மாதங்களைப் பயன்படுத்தும் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எடுத்துக்காட்டாக கேரளாவில், இராசிகளின் பெயரையே மாதங்களுக்கும் வைத்து அழைக்கிறார்கள். தமிழ் மாதப் பெயர்கள் சந்திரமான முறையில் அமைந்த மாதப் பெயர்கள் போல நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்டவை. சூரியமான முறையின் அடிப்படையில் அமைந்த தமிழ் மாதங்களுக்குச் சந்திரமான முறையோடு இணைந்த நட்சத்திரங்களின் பெயர்கள் இடப்பட்டதன் காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
தமிழ்ப் பெயர் (சூரிய மாதப்பெயர்) வழங்கு பெயர் (சந்திர மாதப்பெயர்) இராசி
1 மேழம் சித்திரை மேடம்
2 விடை வைகாசி இடபம்
3 ஆடவை ஆனி மிதுனம்
4 கடகம் ஆடி கர்க்கடகம்
5 மடங்கல் ஆவணி சிங்கம்
6 கன்னி புரட்டாசி கன்னி
7 துலை ஐப்பசி துலாம்
8 நளி கார்த்திகை விருச்சிகம்
9 சிலை மார்கழி தனு
10 சுறவம் தை மகரம்
11 கும்பம் மாசி கும்பம்
12 மீனம் வ்பங்குனி மீனம்
அன்றைய தமிழன் நிலத்தை உழுதான். அந்த நிலத்தையும் ஆண்டான். அதனூடே தன் பண்பாட்டையும், நாகரீகத்தையும் உயர்த்தினான். இயற்கையோடு ஒன்றி, இயற்கையை வழிபட்டான். இயற்கைக்கு நன்றியும் தெரிவித்தான். அவனது மாண்புமிகு வாழ்வில் எந்த ஓர் அங்கத்திலும் மண்ணின் மாண்பு மிளிர்ந்தது. அது மண்ணை ஒட்டியே மலர்ந்தது. அந்த மண் நமக்குரியதாக இன்று இல்லாததால் நமது பண்பாட்டுப் பெருமையும் நம்மை விட்டு மறைந்து வருகின்றது. இதற்கு ஓர் உதாரணமாக இந்தச் சித்திரை வருடப் பிறப்பை சுட்டிக் காட்டலாம்.
தனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டவே இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில் எந்த எந்தக் கொண்டாட்டங்களையும், எவரும், எதையும், எப்படியும் கொண்டாடட்டும்; ஆனால் பெயரை மட்டும் சரியாக சொல்லட்டும் –
*“தமிழனை வென்ற, ஆரியப் புது வருடப் பிறப்பு”*
இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் முக்கியமாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகமும் பண்பாடும, ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு – மலேசிய சிறப்பு மலர், தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன.